January 28, 2012 · 0 Comments
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறாததால் மூத்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜீவ் சுக்லா, ‘நமது அணி சரியாக விளையாடவில்லை என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணி நன்றாக விளையாடியதையும் அங்கீகரிக்க வேண்டும்’ என்றார்.
மேலும், ‘தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பிப்ரவரி 5-ந் தேதி தொடங்கும் இலங்கையுடனான ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’, என்றும் சுக்லா கூறியுள்ளார்.
“ஆஸ்திரேலியாவுடனான தோல்வியைப் பற்றி பேசும் நாம், அதே அணியை நமது மண்ணில் வீழ்த்தியதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மேற்கிந்திய தீவுகளையும் நாம் தோற்கடித்துள்ளோம். பெரும்பாலும் வெற்றி பெற்ற தொடர்களைப் பற்றி நாம் மறந்துவிடுகிறோம்” என்பதும் சுக்லாவின் கருத்து.
“இந்திய அணியில் மாற்றங்கள் தேவைபட்டால் நிச்சயமாக மேற்கொள்வோம்” என்றும் சுக்லா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடனான தோல்வியைத் தொடர்ந்து டோணி, தெண்டுல்கர், திராவிட், லட்சுமணன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுவது பற்றி கருத்து தெரிவித்த சுக்லா, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
மேலும், ‘அணியில் இடம் பெறும் வீரர்களை தேர்வுக் கமிட்டித்தான் முடிவு செய்யும். நாங்கள் அந்த முடிவு பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. அவர்களது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். என்றார்.
By Ottran.com
Tags: Australia, இந்தியா, கிரிக்கெட், bcci, Cricket