January 24, 2012 · 0 Comments
இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி வீடியோ உரை நிகழ்த்துவதை எதிர்த்து ஜெய்ப்பூரில் போராட்டம் வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழா பெரும் சர்ச்சைகளுடன் கூடியதாக மாறி விட்டது – சல்மான் ருஷ்டியின் புண்ணியத்தால். முதலில் அவர் விழாவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் போலீஸார் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறவே தனது பயணத்தை ரத்து செய்தார் ருஷ்டி.
ஆனால் பொய் சொல்லி தன்னை வர விடாமல் போலீஸார் தடுத்து விட்டதாக பின்னர் குற்றம் சாட்டினார் ருஷ்டி. இதை ராஜஸ்தான் அரசு மறுத்தது.
இந்த நிலையில், ருஷ்டியின் சாத்தானிக் வேர்சஸ் நூலிலிருந்து சில பகுதிகளை விழாவில் வாசித்ததால் நான்கு எழுத்தாளர்களை வெளியேற உத்தரவிடப்பட்டது. இதுவும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஜெய்ப்பூர் விழாவில் ருஷ்டி உரை நிகழ்த்தவுள்ளார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசும் கூட இதுவரை அனுமதி தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விழா அமைப்பாளர்கள், மாநில அரசுடனும், காவல்துறையுடனும் பேசி வருகின்றனர்.
இன்று மாலை 3.45 மணிக்கு வீடியோ உரையை ருஷ்டி நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலிருந்து அவர் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிழ்ச்சியை மாடரேட் செய்யும் பொறுப்பை என்டிடிவியின் பர்கா தத் ஏற்றுள்ளாராம்.
இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தில் ருஷ்டியின் பேச்சை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
By Ottran.com
Tags: சல்மான் ருஷ்டி, ஜெய்ப்பூர், salman rushdie